சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டார்.
பின்னர் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தை பெரியகருப்பன் தொடங்கிவைத்தார்.
பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தை தொடங்கிவைத்த பெரியகருப்பன் இதில் முதற்கட்டமாக சுமார் 25 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்கான அடையாள அட்டையை பெரியகருப்பன் வழங்கினார்.
அச்சத்தில் அதிமுக
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர், “உள்ளாட்சி அமைப்புகள் என்பது நாட்டின் ஆணிவேர் ஆகும். கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்குப் பயந்துகொண்டு தள்ளிப்போட்டுவந்தது.
தாங்கள் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில்தான் அதிமுக தேர்தலைத் தள்ளிப்போட்டுவந்தது. நினைத்த நேரத்தில் தேவைப்படும்போது தேர்தலை நடத்துவது என்பது நிறைய தவறுகள் நடப்பதற்கு வழிவகுக்கும்.
அவ்வாறு இல்லாமல் திமுக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே முதலமைச்சர், தேர்தல் நடத்தாமல் காலதாமதம் செய்துவந்த பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்; இது பாரட்டத்தக்கது.
இதனால் அனைத்து மாநகராட்சி, நகரங்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உடனடியாகத் தேர்தல் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலம் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்