சிவகங்கை: அடிக்கல் நாட்டப்பட்டு ஒராண்டாகியும் கீழடி அகழ்வைப்பகத்திற்கான பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில், கடந்த 2015ஆம் ஆண்டு, இந்திய தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு தொடங்கப்பட்டு மூன்று கட்டங்களாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், தொடங்கப்பட்ட அகழாய்வு பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றன. தற்போது ஏழாவது கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம்
இந்த அகழ்வாய்வில் இருந்து, 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்வேறு வகையான பெருட்கள் கிடைத்து வருகின்றன. அவைகளைக் காட்சிபடுத்தும் வகையில் உலகத்தரத்துடன், அகழ் வைப்பகம் ஒன்றை வைப்பதற்காக அப்போதைய அதிமுக அரசு ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அகழ் வைப்பக கட்டிடத்திற்காக, 2020 ஜூன் மாதம் அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாறியுள்ள நிலையில், திமுக அரசின், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் உள்ளிட்டோர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அண்மையில்,மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி அகழ்வைப்பகத்தின் பணிகளை ஆய்வு செய்த போது, அடுத்த நான்கு மாதத்திற்குள்ள உலகத்தரத்துடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்படும் எனவும், ரூ12 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில், அகழ் வைப்பகம் மற்றும் அருங்காட்சியகத்திற்கான தனித்தனி பிரிவுகள் கட்டப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மந்தகதியில் பணிகள்
அகழ் வைப்பகத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்ட ஒராண்டாகியும் கட்டுமான பணிகள் தொடர்ந்து மந்த நிலையிலேயே நடந்து வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படுமானால், மதுரை அருகே உலகத்தரத்தில் ஒரு அருங்காட்சியகம் அமைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் அது சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஈர்க்கும் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:மதுரை அருகே கி.பி. 10ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு!