காஞ்சிபுரம் அருகே உள்ள மதுராந்தகம் ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மூன்று நாட்கள் கல்விச் சுற்றுலாவாக சிவகங்கை வந்தனர். இவர்களுடன் துறைத்தலைவர் அமுல் சோபியா, ஆசிரியர் பிரபு ஆகியோர் உடன் வந்திருந்தனர். இவர்களுக்கு சிவகங்கை தொல்புலம் அமைப்பைச் சேர்ந்த ரமேஷ், கோவை இந்துஸ்தான் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் வழிகாட்டினர்.
முதலாவதாக, காளையார்கோவில் அருகில் உள்ள நல்லேந்தல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, பழங்கால கல்வெட்டுகள் ஆகியவற்றை அவர்கள் கண்டனர். அதன் பின்னர், முடிக்கரை பகுதியில் உள்ள பழங்கால கோயில் அக்கால மக்களின் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டும் ஓவியங்களை கண்டு ரசித்தனர்.