சிவகங்கை: காரைக்குடியில் புகழ்பெற்ற கொப்புடையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் வாரத்தில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், வைகாசி முதல் வாரமான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இத்தேர் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு தெற்கு தெரு, பழைய செஞ்சை, சங்கம் திடல் வழியாக காட்டம்மன் கோயிலுக்குச் செல்லும். இவ்வாறு சென்ற தேர், மறுநாள் மீண்டும் கோயிலுக்குத் திரும்பும்.
இந்நிலையில், தெற்கு தெரு பகுதியினருக்கும் சங்கம் திடல் பகுதியினருக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதிலும், இந்த இரண்டு பகுதியினரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தகராறு முற்றி வன்முறையானது. இந்த வன்முறையில், இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இன்று மீண்டும் கோயிலுக்கு திரும்பிய தேரின் முன் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் அமர்ந்து, தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.