சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடிடியில் ஆறாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக நடைபெறும் இந்தப் பணிகள் கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றன. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின.
இதுவரை ஐந்து கட்ட அகழாய்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் மூன்று கட்ட அகழாய்வுகளிலும், 7,818 தொல் பொருள்களும், தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்ட நான்காம் கட்ட அகழாய்வில் 5,820 தொல் பொருள்களும், ஐந்தாம் கட்ட ஆய்வில் 900 தொல் பொருள்களும் கண்டறியப்பட்டன.
கீழடி அகழாய்வு ஆவணமாக்கல் பணிகள் தொடக்கம்! தற்போது நடைபெற்று வரும் ஆறாம் கட்ட அகழாய்வில் கடந்த ஜூலை 31ஆம் தேதி வரை கீழடியில் 950, கொந்தகையில் 21, மணலூரில் 29, அகரத்தில் 786 என மொத்தம் ஆயிரத்து 786 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கொந்தகையில் 40 முதுமக்கள் தாழிகளும் மேற்கண்ட நான்கு இடங்களிலும் இதுவரை 128 கரிம படிங்களும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செப்டம்பர் மாதத்துடன் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைவதையொட்டி கீழடி,கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் இதுவரை நடைபெற்ற அகழாய்வு பணிகள் குறித்து ஆவணமாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகள் செப்டம்பர் மாத இறுதியுடன் நிறைவடையும் என தமிழ்நாடு தொல்லியல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரூ.12.21 கோடியில் கீழடி அருங்காட்சியகம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!