சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்கும் ஏற்காட்டில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கோடைகாலம் என்பதால் மேய்ச்சலின்றித் தவிக்கும் கால்நடைகள் குப்பைக் கழிவுகளில் உணவைத் தேடி உண்ணும் அவலம் நிலவுகிறது. இதனால் கால்நடைகளின் உடல்நலம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கால்நடைகள் குப்பைக் கழிவுகளில் உணவைத் தேடி உண்ணும் அவலம் ஏற்காடு பகுதியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிர்புறம் உள்ள பகுதியில் குழிவெட்டி கொட்டப்படுகிறது. மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளை மேலாண்மை செய்து சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எந்தவித முயற்சியையும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, 144 தடை உத்தரவு இருப்பதால் எந்தவித கழிவு மேலாண்மையும் செய்ய இயலவில்லை என்றும், தடை உத்தரவு முடிந்ததும் கழிவுகளை அகற்றிவிட்டு தூய்மையான இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
குப்பை கழிவுகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் ஏற்காடு வெறிச்சோடிக் காணப்படும் இந்தச் சூழலிலும், குப்பை கழிவுகளை மேலாண்மை செய்யாமல் இருப்பது, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியத்தைக் காட்டும்விதமாக அமைந்துள்ளது.
இதையும் பார்க்க: மே 3ஆம் தேதி வரை எந்த தளர்வும் கிடையாது! - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்