சேலம்:சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, இன்று (மார்ச் 17) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய மேனகா, “சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் பெலாக்காடு தரப்பிற்கு உள்பட்ட மாரமங்கலம், கேளையூர், செந்திட்டு, அரங்கம், சின்ன மதூர், மதூர், பெலாக்காடு, கே.நார்த்தஞ்சேடு மற்றும் தும்பிப்பாடி ஆகிய கிராமங்களில் சுமார் 4,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதி பிரச்னைக்குரியதாக இருந்தது.
தற்போது ஏற்காடு முதல் கொட்டச்சேடு வரை செல்லும் சாலையில், ஆத்துப்பாலம் என்னும் இடத்தில் இருந்து கூட்டு முட்டல், மாரமங்கலம், கேளையூர், பெலாக்காடு, மதூர், அரங்கம், செந்திட்டு, நார்த்தஞ்சேடு, தும்பிப்பாடி வரை மட்டுமே தார்சாலை வசதி உள்ளது. அதற்கு மேல் சரியான சாலை வசதிகள் கிடையாது. இதனால் இந்த கிராம மக்கள், கொட்டச்சேடு மற்றும் ஏற்காடு செல்ல வேண்டும் என்றால், 28 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் தற்போது இதற்கு தீர்வு காணும் வகையில், களம் 6 மற்றும் களம் 7 ஆகிய இரண்டு வழித்தடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. களம் 6 தனியார் எஸ்டேட் வழியாகவும், களம் 7 தனியார் எஸ்டேட் மற்றும் பட்டாதாரர்கள் நிலம் வழியாகவும் செல்கிறது. இதில் களம் 6இல் சாலை அமைக்க நிலம் எடுக்க முடிவு செய்தபோது, தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது.
ஆனால், களம் 7இல் சாலை அமைக்க தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர். மேலும், 9 தனியார் பட்டாதாரர்கள் தங்களது 0.9 கிலோ மீட்டர் தொலைவிலான நிலங்களை சாலை அமைக்க தானமாக, ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வழங்கி உள்ளார்கள். ஆகையால், தற்போது களம் 7இல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.