பேருந்து முன்பு பாய்ந்து பெண் பலி - மகனின் கல்லூரி கட்டணத்திற்காக விபரீத முடிவு! சேலம்: சேலம் மாநகர் முள்ளுவாடி கேட் அடுத்த மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி(வயது 46). சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கணவரை இழந்த இவருக்கு தனியார் கல்லூரியில் படிக்கும் மகளும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மகனும் உள்ளனர். கடந்த மாதம்(ஜூன்) 28-ஆம் தேதி காலை சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் தனியார் பேருந்து மோதி பாப்பாத்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சாலையின் ஓரமாக நடந்துச் சென்று கொண்டிருந்த பாப்பாத்தி திடீரென தனியார் பேருந்தின் குறுக்கே சென்றதும், பின்னர் அவர் மீது பேருந்து மோதிய காட்சிகளும் பதிவாகியிருந்தது. இதனால் பாப்பாத்தி திட்டமிட்டே உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.
இதையும் படிங்க:போலீசாரிடமே கைவரிசை காட்டிய கொள்ளையன்... துப்பாக்கியை திருடி மரத்தில் ஏறி அலப்பறை!
சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், " கல்லூரியில் படிக்கும் அவரது மகனுக்குக் கல்லூரி கட்டணம் 45 ஆயிரம் ரூபாய் செலுத்தும் படி கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது ஆனால் அந்த பணத்தை அவரால் கட்ட முடியவில்லை. இதனால் பலரிடம் கடன் கேட்டுள்ளார், ஆனால் யாரும் பணம் கொடுத்து உதவவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் அவர் காணப்பட்டுள்ளார்" என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க:விமான நிலையத்தில் வேலை! எம்பிஏ பட்டதாரியிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்த தம்பதி கைது!
மேலும், "தூய்மை பணியாளராக பணிபுரிவதால் விபத்தில் உயிரிழந்தால், அரசு நிவாரணத்தொகை கிடைக்கும். மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் அல்லது கருணையின் அடிப்படையில் மகனுக்கு வேலை மகனுக்கு கிடைக்கும் என சிலர் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் பாப்பாத்தி ஓடும் பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என போலீசார் கூறுகின்றனர்.
இதனால் விபத்து வழக்கைத் தற்கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தூய்மை பணியாளராக இருந்த பாப்பாத்தியின் வருமானத்தை நம்பியே வாழ்ந்து வந்த குடும்பத்தினர் அவரது மறைவால் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதோடு, பாப்பாத்தி செய்த இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இது தொடர்பாக தூய்மைப் பணியாளர் நல சங்கத்தின் நிர்வாகி பெரியசாமியை ஈடிவி பாரத் தொடர்பு கொண்டது. அப்போது பதிலளித்த அவர், இறந்த பெண் தூய்மை பணியாளர் பாப்பாத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர தூய்மை பணியாளர் இல்லை என்பதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளதாக கூறினார்.
நிரந்தர தூய்மை பணியாளராக இருந்து தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருந்தால் அவரது இறப்பிற்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வரை அரசால் வழங்கப்படும் இவர் தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறாரா இல்லையா என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
இது போன்ற மன அழுத்தத்தில் தூய்மை பணியாளர்கள் இருக்கக் கூடாது என்பதினால் தான் சங்கத்தில் இணைந்து செயல்பட வேண்டும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்று நாங்கள் தூய்மை பணியாளர்களை வலியுறுத்தி வருகிறோம் என்றும் பெரியசாமி கூறினார்.
இதையும் படிங்க:மனைவியை கடத்திய கணவர்.. மகளை மீட்டுத்தர தாய் கோரிக்கை.. வெளியான ஆடியோ!