சேலம் மாநகர் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் குளிர்பானம் விற்பனை முகவராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், பிரேமா, மலர்விழி, நந்தினி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் மலர்விழி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடியேறி உள்ளார்.
மலர்விழி காதல் திருமணம் செய்த காரணத்தினால் தாய் சந்திரா, சகோதரிகள் இருவரும் மலர்விழியின் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தந்தை நாராயணனுடன் அடிக்கடி மலர்விழி தொலைபேசி மூலமாக பேசி வந்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாராயணனின் மனைவி சந்திரா மற்றும் இரண்டு மகள்கள் சேர்ந்து நாராயணனை கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நாராயணன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது குளிர்பானங்கள் விற்பனைக்காக, ஒரு கடையின் முன்பாக நின்று கொண்டிருந்த போது, நாராயணனை, தீபக் என்ற நபர் மூன்று இளைஞர்களுடன் சேர்ந்து காரில் வலுக்கட்டாயமாக அடித்து தூக்கி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நாராயணனின் மகள் மலர்விழி காவல் துறையினரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து உள்ளார். பின்னர், காவல் துறையினர் விசாரணையில் நாராயணனை (New life recovery foundation) தனியார் மீட்பு மையத்தில் வைத்து இருப்பதாக தகவல் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் மலர்விழி நேரடியாக தந்தையை சந்திக்க முயற்சித்தபோது, அனுமதி அளிக்காததால் சேலம் மாநகர காவல் துறையினர் மற்றும் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அங்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி, இது தொடர்பாக மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பின்னர், மனுவை விசாரித்த நீதிபதிகள் நாராயணனை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி, காவல் துறையினர் நேரடியாக ஆஜர்படுத்தினர்.