சேலம்: தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில போலீசாருக்கு 25 ஆண்டுகாலமாகப் போக்குக் காட்டி, யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் மற்றும் சந்தன மரங்களைக் கடத்தி விற்பனை செய்து வந்தவர் வீரப்பன். கடந்த 2004-ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 16), வீரப்பன் கூட்டாளிகளில் முக்கியமானவரும், வீரப்பன் குடும்பத்துக்குப் பங்காளி உறவான மீசை மாதையன் உயிரிழந்தார். மீசை மாதையன் குடும்பமே வீரப்பனுக்கு விசுவாசமாக இருந்துள்ளது. இவரின் தம்பி சாமிநாதன், முனியன், சுண்டா வெள்ளையன், மகன் மாதேஷ் ஆகியோர் வீரப்பன் சந்தனமரக் கடத்தல் வியாபாரம் செய்த நேரத்தில், வீரப்பனின் குழுவில் முதன்மை இடத்திலிருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தன மர கடத்தலில் தொடர்புடைய வீரப்பன் உள்ளிட்ட பலரையும் கைது செய்யும் நோக்கில் தமிழ்நாடு கர்நாடகா கேரளா மாநில போலீசார் பல ஆண்டுகளாகத் தேடி வந்தனர். போலீசாரின் தேடுதலுக்குப் பயந்து மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்டிற்குள் அனைவரும் தலைமறைவாக இருந்தனர். தலைமறைவானார்களில் சாமிநாதன் மட்டும் கடந்த 1991ம் ஆண்டு வனத்துறையினரிடம் சரணடைந்தார்.
அதனைத் தொடர்ந்து 1993-ஆம் ஆண்டு, முனியன், சுண்டா வெள்ளையன் இருவரும் போலீசாரிடம் சரணடைந்தனர். ஆனால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 1998-ஆம் ஆண்டு மீசைக்கார மாதையனின் மகன் மாதேஷ், சத்தியமங்கலம் காட்டில் உள்ள புளியங்கோம்பை என்ற ஊரில், தமிழ்நாடு அதிரடிப்படை ஆய்வாளர் மோகன் நவாஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனிடையே, 1993- ம் ஆண்டு வீரப்பன் குழுவிலிருந்து செங்கப்பாடிக்கு தப்பி வந்த மீசை மாதையன் கர்நாடக போலீசில் சரணடைந்தார். அவர் மீது நான்கு தடா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் முறையீட்டு மனு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய நால்வரின் ஆயுள் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக உச்ச நீதிமன்றம் மாற்றியது.