சேலம்: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் விழாவின் போது அப்பகுதியை சேர்ந்த இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் காரணமாக இந்து சமய அறநிலையத் அதிகாரிகள் கோயிலுக்கு சீல் வைத்தும் காவல்துறை பாதுகாப்பு வழங்கியும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனிடையே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், மேல்பாதி கிராமத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார். அதில் ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் எம்.பி.சி மற்றும் ஒ.பி.சி பிரிவை சேர்ந்த மக்களையும் பொதுமேடையில் வைத்து கடுமையாக விமர்சித்து பேசினார்.
மேலும், அப்பகுதி மக்களிடையே வன்முறையை தூண்டிவிடும் வகையில் பொதுவெளியில் திருமாவளவன் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சமூக நீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலுவையும் திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனையடுத்து, இரு தரப்பு மக்களிடையே மோதலை உருவாக்கும் விதத்திலும் அமைதியை சீர்குலைத்து சுயலாபம் தேடி வருவதாக திருமாவளவனுக்கு வன்னியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதனிடையே வன்னியர் சங்க மாநில செயலாளர் மு.கார்த்தி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் நான்கில் திருமாவளவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் பேசிய வீடியோ ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.