சேலம் மாவட்டம் குருவம்பட்டி அருகே உள்ள வன உயிரியல் பூங்காவில், மயில், யானை, முதலைகள் வங்காநரி போன்றவை வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு செயற்கை நீரூற்று, பொதுமக்களை கவரும் வகையிலான செடிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு வருகிறது.
குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா இங்குள்ள மிருகங்களைத் துன்புறுத்தக் கூடாது, தின்பண்டங்களைத் தரக்கூடாது உள்ளிட்ட எச்சரிக்கை வாசகங்கள் பூங்கா முழுவதும் எழுதப்பட்டிருந்தாலும், சுற்றிப் பார்க்க வரும் சிலர், மயில் மற்றும் முதலைகளின் மீது கற்களை வீசுவதாக ரேஞ்சர் முரளிக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து ரேஞ்சர் முரளியும் அவருடன் பணியாற்றும் ஊழியர்களும் உயிரியல் பூங்கா முழுவதும் சுற்றிப்பார்த்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சேலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் முருகேசன், ஜெகதீஷ் ஆகியோர் வன உயிரியல் பூங்காவிற்கு சுற்றிப் பார்க்க வந்தனர். அப்போது இவர்கள் இருவரும் முதலைகள் இருக்கும் பகுதிக்குச் சென்று முதலைகளின் மீது கற்களை வீசினர். இதை கவனித்த வன ஊழியர்கள் இருவரையும் தனியே அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இவர்கள் விளையாட்டிற்காக முதலைகள் மீது கற்களை வீசியதாகவும் தெரியாமல் செய்துவிட்டோம் என்றும் தெரிவித்ததையடுத்து வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விலங்குகளை துன்புறுத்திய குற்றத்திற்காக இருவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்கள் வேலை பார்க்கும் ஹோட்டல் முதலாளிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் சிலர் அங்கு வந்து ரேஞ்சர் முரளியிடம் ரூபாய் 10,000 அபராதத்தைக் கட்டி ஹோட்டல் ஊழியர்கள் முருகேசன், ஜெகதீஷ் இருவரையும் அழைத்துச் சென்றனர்.