சேலம்சூரமங்கலம் அருகேவுள்ள புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹோமியோபதி மருத்துவர் சுப்பிரமணியன். இவர் சூரமங்கலம் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இதைத் தவிர பழைய கார்களை வாங்கி விற்றும் தொழிலும் செய்து வருகிறார். தனது தொழிலுக்காக கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் சின்ன திருப்பதியில் ரியல் எஸ்டேட் நடத்தி வரும் சரண்யாவிடம் இருந்து ரூபாய் 24 லட்சம் கடனாக பெற்றார். இதற்கு ரூபாய் 17 லட்சம் வரை வட்டி கட்டிவிட்டார். ஆனால், சரண்யா அசல் வட்டி சேர்த்து 70 லட்சம் வரை தர வேண்டும் என சுப்பிரமணியனிடம் தெரிவித்தார்.
ஆனால் சுப்பிரமணியன், “அசல் வட்டி கொடுத்து விட்டேன். திரும்ப எதற்கு பணம் தர வேண்டும் என சரண்யாவிடம் கேட்டார். இதன் பின்னர் தொடர்ந்து சுப்பிரமணியனுக்கு மிரட்டல் வந்தது. இந்நிலையில் சுப்பிரமணியனை நேற்று (அக்.14) பட்டப்பகலில் சேலத்தைச் சேர்ந்த பிரபல இரண்டு ரவுடிகள் அவரைக் காரில் கடத்திச் சென்றனர்.
இதையறிந்த சுப்பிரமணியனின் மனைவி அன்பரசி உடனே சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதாவிடம் புகார் செய்தார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து, சேலத்தில் காரில் வைத்து சுப்பிரமணியனை மிரட்டிக்கொண்டிருந்த இரண்டு ரவுடிகளிடம் இருந்து சுப்பிரமணியனை மீட்டனர்.