சேலம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் தன்னை நிகழ்ச்சிக்கு அழைத்தால் அலுவலர்கள் மிரட்டப்படுவதாகவும் ட்விட்டரில் பதிவிட்டார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “சுயமரியாதை என் உயிருக்கு மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்பிக்கு அழைப்பு கொடுக்க கூடாதா? அதையும் மீறி அலுவலர்கள் அழைப்பு கொடுத்தால், அந்த அலுவலர்கள் மிரட்டப்படுகிறார்கள். நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கட்சி தோழர்கள் மற்றும் நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.
ஆறு சட்டமன்ற தொகுதிக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணி செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் எதிர்க்கட்சி எம்பி என்று நினைக்கிறார். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்கள்.
என்னை புறக்கணிப்பது எனக்கு வாக்களித்த 20 லட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமமாகும். நான் போராட்டக்காரன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதை சம்பந்தப்படுத்த அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என பதிவிட்டிருந்தார்.