சேலம்:தருமபுரியில் இருந்து கோவைக்குச் சட்ட விரோதமாகக் கடத்தப்பட்ட இரண்டரை டன் வெடிமருந்துகள் சேலத்தில் சிக்கியுள்ளது. தருமபுரியிலிருந்து பெங்களூரு பைபாஸ் சாலையில், கோவைக்குச் சேலம் வழியாக வெடி பொருட்கள் கடத்தப்படுவதாகச் சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தனிப்படை காவல் துறை ஓமலூர் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வைக்கோல் லோடு ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் ஒன்றைக் காவல் துறை சோதனை செய்தபோது வைக்கோல் புல்லுக்கு அடியே பெட்டி பெட்டியாக வெடி மருந்துகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்திக் கொண்டு வரப்பட்ட தலா 25 கிலோ எடை கொண்ட 100 ஜெலட்டின் ஜெல் பெட்டிகள், 950 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஓட்டுநர் இளையராஜாவைக் கைது செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்கள் மற்றும் வாகனம், நகரமலை அடிவாரத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் தளத்தில் துப்பாக்கி ஏந்திய பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
வைக்கோல் புல்லுக்கு அடியில் வெடி மருந்துகள் பதுக்கப்பட்டு சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வெடி மருந்துகள் கல்குவாரிகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்டதா இல்லை வேறு எதற்காகக் கொண்டு வரப்பட்டதா எங்கு இருந்து கொண்டு வரப்பட்டது இந்த வெடி மருந்து கடத்தலில் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்து சேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ராஜஸ்தானை கைப்பற்றுமா பாஜக? ஆட்சியை தக்கவைக்குமா காங்கிரஸ்? கருத்து கணிப்புகள் என்ன சொல்கிறது?