சேலம்:இந்தியாவின் மனித வளத்தை விமான போக்குவரத்து துறையில் சிறப்பாக பயன்படுத்த முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஆராய்ச்சி அறக்கட்டளை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தீபம் கல்வி தொழில்நுட்ப குழுமம் ஆகியவை இணைந்து, முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று (செப்.13) பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஜெகநாதன் மற்றும் கீதா லட்சுமியின் முன்னிலையில், பதிவாளர்கள் விஸ்வநாத மூர்த்தி, தமிழ் வேந்தன், தீபம் கல்வி தொழில்நுட்பக் குழும தலைவர் அண்ணாமலை பாண்டியன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க:தி.நகர் சத்யா மீதான சொத்து குவிப்பு வழக்கு.. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவு... இருவேறு கருத்துகளால் குழப்பம்!
அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் பேசியதவாது, "இந்தியாவின் மனித வளத்தை ஏவியேஷன் துறையில் சிறப்பாக பயன்படுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 'ட்ரோன்' இயக்குவது தொடர்பான முழு பயிற்சி, விவசாயிகள், மகளிர், கிராமப்புற இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு டி.ஜி.சி.ஏ சான்றிதழ் வழங்கப்படும்.
இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் பெரிய வாய்ப்புகளை பெற்று பைலட்டுகளாக மாற்றமடைவர். மழைக்கு சரியான முன்னறிவிப்பை, நெதர்லாந்து தொழில்நுட்பத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார். மேலும், நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைமை திட்ட அலுவலர் சசிகுமார், உள்தர மதிப்பீட்டு மைய இயக்குனர் யோகா ஆனந்தன், வேளாண்மை பல்கலைக்கழக நீர், புவியியல் மைய இயக்குனர் பழனி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:"நீதித் துறை நிர்வாகத்தை பாதிக்கிறதா ஊடகங்கள்...?" உச்ச நீதிமன்றம் கூறும் கருத்து என்ன?