சேலம்:ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்ஏற்காட்டில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் இன்று (ஜூலை 14) படகு இல்லம், தமிழ்நாடு ஹோட்டல், மான் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து படகு இல்லத்தில் புதிய உணவகத்தையும் திறந்து வைத்தார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா. இராமச்சந்திரன் சென்ற இரண்டு நாட்கள் பயணமாக சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அதைத் தொடர்ந்து பூங்கா மற்றும் சேலத்தில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு கட்டடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களை தரம் உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் உதகை, கோவை, ஏற்காடு ஆகிய இடங்களில் மிதவை படகு உணவகம் அமைக்கும் நடவடிக்கைகள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஏற்காடு படகு இல்லத்தில் ஒலி, ஒளி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், அதே போல ஏற்காடு படகு இல்லத்தில் மிதவை படகு உணவகமும் அமைக்கப்படும் எனவும் கூறினார்.
தனியாருக்கு நிகரான அனைத்து வசதிகளுடனும் தரம் உயர்த்தி, தமிழக ஹோட்டல்கள் அமைக்கப்படும் என தெரிவித்த அவர் அதனை தொடர்ந்து நேற்று இரவு (ஜூலை 13) ஏற்காடு சென்று, இன்று காலை படகு இல்லம், ரோஜா தோட்டம், மான் பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சரியான பராமரிப்பு இல்லாத இடங்களை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும், ஏற்காடு சுற்றுலா தளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.