சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் என்கின்ற ராஜீவ். இவர் மனைவி ராணி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்களுடன் வாழ்ந்துவருகிறார்.
கடந்த 10ஆம் தேதி அர்ஜுனனும், ராணியும் சேலத்திலிருந்து காசிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ராணி உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இறந்த ராணியின் உடலை சேலம் கொண்டுவர முடியாமல் அவரது கணவர் அர்ஜுன் காசியில் தவித்துவருகிறார்.
இது குறித்து அர்ஜுன் தொலைபேசி வாயிலாக சேலத்தில் இருக்கும் தனது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் உறவினர்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது சம்பந்தமாக மனு கொடுக்க வந்த அவர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், காசியிலிருந்து ராணியின் உடலை சேலம் கொண்டுவர ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.
காசியில் இறந்த தாயின் உடலை கொண்டுவர வலியுறுத்தி குடும்பத்தினர் போராட்டம்!