மத்திய அரசின் 'ஜல் சக்தி அபியான்’ திட்டம் தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தை சேலம் மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை திட்ட இணைச் செயலாளரும், ஆய்வு குழு தலைவருமான திருப்புகழ் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் மாவட்டத்தின் நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை ஆய்வு குழுவினருடன் அலுவலர்கள் விளக்கினர்.
'ஜல் சக்தி அபியான் திட்டம்' தொடர்ந்து அனைத்துத் துறை அலுவலர்கள் மத்தியில் பேசிய திருப்புகழ், இந்தியா முழுவதும் நீர் பற்றாக்குறை உள்ள 250 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் 'ஜல் சக்தி அபியான்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இத்திட்டத்திற்கு உதவிடும் வகையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய வழிகாட்டும் குழுவினர் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று பணியாற்ற பிரதமர் மோடி உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், மழைநீர் சேகரிப்பை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றுவது, பிரதமரின் கனவுத் திட்டமாக உள்ளது என்று கூறிய அவர் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய அரசு அந்தந்த மாவட்டங்களில் நீர் பற்றாக்குறையை மாற்றி, நீர் உபரி மாவட்டங்களாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உதவி செய்யும் என்றும் கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.