தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின்போது அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் 2,000-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் விடுக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் நாளில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இரண்டாவது நாள் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.