சேலம் ஜங்ஷன் அடுத்துள்ள சோளம்பள்ளம் பகுதியில் மூர்த்தி என்பவர் பழைய இரும்புக்கடை நடத்திவருகிறார். நேற்று மாலை மூர்த்தி தனது கடையின் அருகில் உள்ள தேநீர் கடைக்கு தேநீர் அருந்தச் சென்றுள்ளார். தேநீர் அருந்திவிட்டு திரும்பி வரும்போது, கடை தீப்பிடித்து எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தில் கடையிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் அனைத்தும் எரிந்த நாசமாகின. இந்தத் தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்ததோடு, சாலை முழுவதும் அனல் காற்று வீசத் தொடங்கியது.