தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் வேம்படிதாளம் புதிர்நிலைகள் பற்றி வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்ன? - Archaeology

enigmatic discovery: சேலம் மாவட்டம், வேம்படிதாளம் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான புதிர் நிலைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

enigmatic discovery
புதிர்நிலைகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 6:30 PM IST

சேலம்: செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன், “சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அருகே உள்ளது கோட்டைப்புதூர் கிராமம். இங்கு சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஆய்வுகள் மேற்கொண்டு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு புதிர்நிலைகளை கண்டறிந்தனர். இவை இரண்டும் வழிபாட்டில் உள்ளன.

இப் புதிர்நிலைகளில் ஒன்று மிகப்பெரியது. இப் பெரிய புதிர்நிலை வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பெருங்கற்கால ஈமச்சின்னத்திற்கு அருகில் இரண்டாவது புதிர்நிலை அமைக்கப்பட்டுள்ளது. இது முதலாவது புதிர்நிலையைப் போல செய்யப்பட்டதாகும். உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் வேம்படிதாளம் ஒன்றாகக் கருதத்தக்கது என தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவுரைத்துள்ளனர்.

பெரிய புதிர்நிலை வட்ட வடிவில் இருப்பதுடன் அதன் ஆரம் 15 மீ. சுற்றளவு 140 மீட்டர் என்ற அளவில் 700 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது இதன் பிரம்மாண்டத்தைக் காட்டுகிறது. பெருங்கற்காலத்தில் இருந்து தான் புதிர்நிலை அமைப்பை பாறை ஓவியங்களில் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்தியப் பாறை ஓவியங்களில் பல விதங்களில் புதிர்நிலைகள் தீட்டப்பட்டுள்ளன. வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய புதிர்நிலைகள் இந்தியாவில் வெகு அரிதாக உள்ளன.

பெருங்கற்கால வட்டப் புதிர்நிலைகளில் ஒன்று தெற்கு கோவாவில் செங்கும் வட்டத்தில், ரிவோனா கிராமத்திற்கு அருகே உள்ள பன்சாய்மோல் என்றழைக்கப்படும் உஸ்கலிமோல் பகுதியில் உள்ளது. ஏழு நிலைப் பாதைகளைக் கொண்டதாக பாறையில் கீறப்பட்டிருக்கும் இப்புதிர்நிலை பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகும்.

மனித மனமே பெரும் புதிர்நிலை எனவும், அதிலிருந்து வெற்றிகரமாக மீள்வதற்கான பிரயத்தனங்களே புதிர்வழிப் பாதைகளாகவும், விடையைக் கண்டு அடைவதை இலக்காகவும், இருப்பதாக இவ் வட்டப் புதிர்நிலைகளைப் பொதுமைப் படுத்தலாம்.

பெருங்கற்கால மக்களின் பண்பாட்டை அறிவதில், அகழாய்வுகள் மட்டுமல்லாது தொல்லுயிரியல் போன்றவற்றுடன் மானுடவியல் ஆய்வுகளின் அவசியம் உணரப்பட்டுள்ள நிலையில், புதிர்நிலைகள் பற்றிய ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வட்டப் புதிர்நிலைகளை இந்திய மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உஸ்கலிமோல் மற்றும் உண்டவல்லி குகைப் புதிர்நிலைகளைக் கொண்டு உறுதிப்படுத்தலாம்.

ஒன்பதாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான புத்த சமயத்தின் ஒரு கூறான தாந்த்ரீக பெளத்தத்தில் புதிர்நிலைகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. அதனை வைதீக மதங்களும், சமணமும் உள் வாங்கின. சுவஸ்திகம் போன்று இவை மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. வட்டப் புதிர்நிலைகள், சுருள்வழிப் புதிர் நிலைகள், சதுர மற்றும் செவ்வகப் புதிர்நிலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

பெருங்காலப் புதிர்நிலைகள் 2000 ஆண்டுகள் பழமையானவை. மகாபாரத இதிகாசத்தில் வரும் அபிமன்யுவின் இறப்பிற்கான காரணமான சக்கரவியூகத்தை ஒரு புதிர்நிலை எனச் சொல்லலாம். நமது வீடுகளில் வரையப்படும் கோலங்கள் புதிர்நிலைகளின் எச்சங்களாகும்.

தென் இந்தியாவில் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது ஓர் வட்டப் புதிர்நிலையே. அவ்வட்டப் புதிர்நிலையும் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டதாகும். பெருங்கற்கால வட்டப் புதைக்குழிகள், ஈமச்சின்னங்கள் இடையில் நிலப்பகுதியில் கிடைத்துள்ள அப்புதிர்நிலை இதுவரை ஆராயப்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

மேலும், மிகப்பெரும் நீள்சதுரப் புதிர்நிலைகள் தருமபுரி மாவட்ட கம்பையநல்லூரிலும், திருப்பூர் மாவட்ட கெடிமேடு பகுதியிலும் கண்டறியப்பட்டன. இதுவரை தமிழகத்தில் அறியப்பட்ட வட்டப் புதிர்நிலைகள் அளவில் சிறியவை. நீலகிரி முதலான புதிர்நிலைகள் மிக மிகச் சிறிதானவை. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பைரே கெளனி வட்டச் சுழற் புதிர்நிலை சுமார் ஒன்றரை மீட்டர் ஆரம் உடையது.

தற்போது வேம்படிதாளத்தில் அறியப்பட்டுள்ள இரண்டும் மிகப் பிரம்மாண்டமானைவை ஆகும். வேம்படிதாளத்திலுள்ள இவ்வட்டப்புதிர்நிலை கம்பையநல்லூர் புதிர்நிலையை விட 64ச.மீ பெரியது. இதன் காலம் குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். பலமுறை வழிபாட்டிற்காக கலைக்கப்பட்டு மறுபடியும் கட்டப்பட்ட அடையாளங்களைத் தன்னகத்தே இது கொண்டுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் தான் ஏழு சுத்துக்கோட்டை என்றழைக்கப்படும் புதிர்நிலைப் பகுதியில் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டு, புதிர்நிலையின் பெயரிலேயே கோட்டைப் புதூர் என்ற கிராமம் உருவானதை கள ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன், பழையப் புதிர்நிலைக்கு அருகில் ஊர் மக்களால் இரண்டாவது புதிர்நிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு புதிர்நிலைகளை மக்கள் புனிதமாகவும், வழிபாடு செய்யும் இடமாகவும் இருப்பது பழைய வட்டப் புதிர்நிலையே. இதனை அமாவாசை, பெளர்ணமி ஆகிய நாட்களில் மக்கள் படையலிட்டு வழிபடுகின்றனர்.

விஷேசத் தினங்களில் அருகிலுள்ள பெருங்கற்கால மேட்டிலிருக்கும் அம்மன் கோயிலில் நடைபெறும் பூஜைகளுடன் இணைத்து வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். மற்ற புதிர்நிலைகளின் வரலாற்றை அறிய உதவியாக இருக்கும் புராணக் கதைகள் ஏதும் இல்லை. புதிர்நிலையில் வழிபாடு செய்கிறவர்கள் பய பக்தியுடன் புனிதக் கோயிலாகவே மதிப்பதுடன் அற்புதங்களைச் செய்யும் சக்தி உடையாதாகவும் நம்புகின்றனர்.

வேம்படிதாளம் கோட்டைப்புதூர் புதிர்நிலையானது ஒரிசா மாநிலத்திலுள்ள ராணிபூர் ஜஹாரியாவில் மலை மேலுள்ள செளன்சாத் யோகினிக் கோயிலுக்கு அருகில் இருக்கும் புதிர்நிலையை அச்சு அசலாக ஒத்திருப்பது விநோதமாகும். யோகினிக் கோயில் புதிர்நிலை ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

வேம்படிதாளம் புதிர்நிலையின் அளவில் பாதியில் இருக்கும் ராணிபூர் புதிர்நிலை தாந்த்ரீக வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உயர் பேராற்றலைப் பெருக்கிக் கொள்ள உதவியாகக் கருதப்படும் சாதனமாக ராணிபூர் புதிர்நிலை விளங்குகிறது. 64 யோகினிக் கோயிலின் மேலடுத்த வழிபாட்டிடமாகவும் ராணிப்பூர் புதிர்நிலை வழிபாட்டில் உள்ளது.

புதிர்நிலைகள் பற்றிய ஆய்வு நூல் எழுதியுள்ள சுகவன முருகன் இரு விதமான நுழைவுகள் உள்ளவையாக வட்டப் புதிர்நிலைகள் பண்டையக் காலத்தில் அமைக்கப்பட்டன என்றும் கூறுகிறார். வலது பக்க நேர் நுழைவு உள்ளவை கரு தரித்தல் தொடர்பானவை என்றும், மூன்றாம் பாதையில் இடப் பக்கமாக உள்நுழைந்து ஒன்று, மூன்று, ஏழாவது பாதைகளை யோனிச் சக்கரமாக்கி பாதைகளின் அமைவுகளில் சுற்றி மீள்வது தரித்த கரு நல்ல நிலையில் குழந்தைப் பேறு கிடைப்பதற்கானது என்றும் கூறுகிறார்.

ராணிப்பூர் கோயிலைப் போல மேட்டில் அம்மன் கோயில் இருப்பதும், அடுத்து இப் புதிர்நிலை இருப்பதும் 1000 ஆண்டுகள் பழமையானது என்பதை குறைந்த பட்ச கால எல்லையாகக் கொள்ள முடியும். வேம்படிதாளம் புதிர்நிலை பெருங்கற்கால ஈமச்சின்னங்களுக்கு வெகு அருகில் இருப்பதும், இரும்புகால பானை ஓடுகள் சிதறி ஏராளமாகக் கிடைக்கும் பகுதியில் இருப்பதும், ஏரியாக இன்றிருக்கும் நீர்நிலையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.

மேலும், இந்த புதிர்நிலைகள் தாவளங்கள் என்னும் வணிகச் சாத்துகள் தங்குமிடமாகவும், வணிகப் பெருவழி ஊரான வேம்படிதாளம் இருப்பில், இப் புதிர்நிலை இருப்பது இதன் கால நிர்ணயத்தை இன்னும் முன் தள்ள ஏதுவான அம்சங்கள் ஆகும்.

வேம்படிதாளம் பழைய புதிர்நிலையுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிர்நிலையுடன் சேர்த்து இரட்டைப் புதிர்நிலைகள் தங்கள் கிராமத்தில் இருப்பதை வேம்படிதாளம் கோட்டைப்புதூர் கிராம மக்கள் பெருமையாகக் கருதுகின்றனர். தமிழகப் புதிர்நிலைகள் மற்றும் வரலாற்றில் வேம்படிதாளம் புதிர்நிலை மிகமிக அரிய ஒன்றாகும். பழங்காலத்தில் தாவளம் என்பது வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஊரைக் குறிப்பதாகும்”என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் ஐயப்பன் சொர்ண அலங்காரம்!

ABOUT THE AUTHOR

...view details