சேலம்: பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் சாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கை முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் 'மண்டல் கமிஷன்' போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், இஸ்லாமியர் விடுதலை குறித்து திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இதற்காக தீர்மானம் நிறைவேற்றிய அதிமுகவிற்கு மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இன்று (செப்.3) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மத்திய சிறைகளில், சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை பெற்ற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மனிதநேய ஜனநாயக கட்சி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதனையடுத்து சட்ட அமைச்சர் ரகுபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோரிடம் ஆதரவு கேட்டு வருகிறோம். இதன் ஒருபகுதியாக, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியிடம் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பான எங்களது கோரிக்கையையும், போராட்ட முன்னெடுப்புகளையும் குறித்து கூறியவற்றை, அவர் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
இஸ்லாமியர் விடுதலைக்காக தீர்மானம் - வரவேற்பு: அதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடந்த அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில், 'இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறும் என்ற துணிச்சலான முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தமைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டேன்.