சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா ஆட்சி காலம் முதல் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்துசெய்து, தற்போது தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணை 116, 37 ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும்.
2019ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டும். ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான வயது வரம்பை 40 ஆக குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது.