சேலம் சின்ன திருப்பதி பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அப்துல்கலாம் என்ற மாணவர் கல்லூரி இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்வதற்காக கல்லூரிப்பேருந்தில் சென்றுள்ளார்.
கல்லூரி பேருந்து, கல்லூரியை விட்டு வெளியே வருகின்ற பொழுது மாணவன் கீழே இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் வெளியே தவறி, கீழே சாலையில் விழுந்துள்ளார். இதனால், கல்லூரிப் பேருந்தின் பின் சக்கரம் மாணவன் மீது ஏறியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி மாணவர் உயிரிழந்தார். இந்நிலையில், மாணவனின் உயிரிழப்பிற்கு நீதிகேட்டு சின்ன திருப்பதி சாலையில் மாணவர்கள், கல்லூரிப் பேருந்துகளை சிறைப்பிடித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு உடன்படாத மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். தொடர்ந்து இரண்டு மணி நேரமாக பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கல்லூரி பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு - மாணவர்கள் போராட்டம் இதையும் படிங்க:முதலமைச்சர் ஆய்வின்போது பத்திரிகையாளர் மீது பாதுகாப்பு காவலர்கள் தாக்குதல்!