சேலம்: மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணையிலிருந்து வரும் 2.10 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் அதிகளவில் மழை பெய்து வருவதால், அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக கிருஷ்ணராஜா சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து அதிக அளவிலான நீர், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே சுமார் 2.10 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 5) 2.40 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகத்துடன் காணொலி வாயிலாக, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் பயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால், உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நீரில் இறங்குவதையும், கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையும், புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் (செல்ஃபி) எடுப்பதையும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.
காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றது.