சேலம்: கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை அவ்வப்போது இயக்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக ஆன்மிக நகரமான வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06547) வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 வரை சனிக்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 1, 8, 15 ஆகிய தேதிகளில், காலை 7.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கன்டோன்மென்ட், கிருஷ்ணராயபுரம், பங்காருபேட்டை வழியாக மதியம் 12.05 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் சேலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து 12.07 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக இரவு 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.