சேலம்: சித்தனூர் பகுதியைச் சேர்ந்த சகாயமேரி என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து குறுந்தகவலில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, பிரபலமான செல்போன் நிறுவனம் சார்பில் சகாயமேரி நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க உள்ளதாகவும், அதற்காக அட்வான்ஸ் ரூ.30 லட்சமும், மாதவாடகை 35 ஆயிரம் ரூபாயும் தரவேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதனை நம்பிய அப்பெண்மணி, அடையாளம் தெரியாத நபர்களின் வங்கிக் கணக்கிற்கு தனது வங்கிக்கணக்கு மூலம் முன்பணம் ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 500ரூபாயை செலுத்தியுள்ளார்.
இத்தொகையைப் பெற்றுக்கொண்ட நபர்கள் தனது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து, ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் மாநகர சைபர் க்ரைம் பிரிவில் சகாயமேரி புகார் அளித்தார்.
இந்தப் புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.