புரட்டாசி மாதம் பெருமாள் கடவுளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுவதால் பக்தர்கள் விரதம் கடைப்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அசைவ உணவை பெரும்பாலோனோர் புரட்டாசி மாதத்தில் முழுமையாகத் தவிர்த்து விடுவர்.
இந்நிலையில், புரட்டாசி மாதம் நேற்றுமுன்தினத்துடன் நிறைவுற்றதைத் தொடர்ந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று சேலத்திலுள்ள மீன் மார்க்கெட் மற்றும் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மீன் மார்க்கெட்டில் சிலதினங்களுக்கு முன் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கட்லா மீன் ரூ.180 ரூபாய்க்கும், கிலோ 450-க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம் மீன் 700-க்கும், ஆட்டுக்கறியின் விலை 600-க்கும் விற்பனை செய்யபட்டது. இறைச்சிகளின் விலை அதிகமாக இருந்தாலும் விலையைப் பொருட்படுத்தாமல் மக்கள் வாங்கிச்சென்றனர்.
மீன் விற்பனை குறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாதமாகவே மீன், கோழி, ஆட்டுக் கறியின் விலை குறைவாக விற்கப்பட்டது. தற்போது புரட்டாசி முடிந்து ஐப்பசி தொடங்கியுள்ளதால், வியாபாரம் அமோகமாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கழுத்து பகுதி வழியாக முட்டையிடும் 'அதிசயக்கோழி'