சேலம்:வழக்கு ஒன்றிற்காக மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (நவ.28) ஆஜரான நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , "ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் ஆளுநருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.
தவறான பாதையில் பாஜக: இதனால்தான், ஆளுநரே அவசியம் இல்லை என்று சொல்கிறோம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி ஒரு முடிவு எடுக்கிறது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் தடுக்கிறார். அப்படி என்றால் எட்டு கோடி மக்களுக்கு மதிப்பு எங்கு உள்ளது? எங்கு ஜனநாயகம் உள்ளது? என எழுப்பிய கேள்விக்கு, ஆளுகின்ற திமுக தவறான பாதையில் செல்கிறதாக, அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். பாஜக ஆட்சியில் எது சரியாக செல்கிறது. எல்லாம் தனியார் முதலாளிகளுக்கு கொடுத்துள்ளார்கள். மக்களை பதற்றத்தில் வைத்துள்ளனர்" என்றார்.
ஆதார் எண்-முக்கியத்துவம் ஏன்? "அனைத்தும் ஆதார் தான் என்றால், தேசிய குடியுரிமை சான்றிதழ் எதற்காக? பாஜக ஆளும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் சரியான பாதையில் செல்கிறதா? ஏதாவது ஒன்றை கூறி வருகிறார்கள். தமிழகத்தில் இலவசத்தை தொடக்கத்திலிருந்து வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி எதிர்த்து வருகிறோம்.
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுதான் மக்கள் அரசு. தேர்தல் நேரத்தில், நாங்கள் வந்தால் இதை வழங்குகிறோம், அதை வழங்குகிறோம் என கூறுகிறார்கள். ஆட்சிக்கு வந்து, இதை தர வேண்டியது தானே. இதுவும் ஒருவிதமான கையூட்டுதான்" என்றார்.
பாஜகவில் பயங்கரவாதிகள்:பிரதமர் மோடி, காங்கிரஸில் பயங்கரவாதிகள் இருப்பதாக பேசியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மொத்த பயங்கரவாதிகளும் ஆர்எஸ்எஸ், பாஜகவில் தான் உள்ளார்கள் என்று விமர்சனம் செய்தார். மேலும், பாஜக பெண் நிர்வாகிகள் மீது தரக்குறைவாக பேசும் ஆடியோ வெளியாகி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியாக கையாள வேண்டும். பெண்ணை போற்றாத எந்த நாடும் பெருமை அடையாது என்று கூறுகிறார்கள். இந்த விவகாரம் அநாகரீகமானது; இது வருத்தம் அளிக்கிறது.
ஆளுநர் அவசியமா?: மேலும் பேசிய அவர், தமிழக அரசின் செயல்பாடு கேள்வி கேட்கும் அளவிற்கு உள்ளது எனவும் கூறினார். ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டுமா? என்ற கேள்விக்கு, நாட்டிற்கு ஆளுநரே வேண்டாம். ஏழு பேர் விடுதலைக்கு என்னென்ன பாடுபடுத்தினார்கள். ஆளுநரின் கையெழுத்து எட்டு கோடி மக்களின் தலையெழுத்தை எழுதுவதா? என்று கூறினார். தமிழகத்தில் முன்பைவிட, போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு எந்த அளவில் உள்ளது என்று கேள்வி எழுப்பும் அளவில் உள்ளது என குற்றம்சாட்டினார்.