தமிழர்களின் அழிந்துவரும் கலைகளை மீட்டெடுக்கும் விதமாகவும், அக்கலைகளை நம்பியுள்ள கலைஞர்களின் வாழ்விற்கு உதவுகின்ற வகையிலும் சேலத்தில் அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் ஏற்பாட்டில், ’சேலம் சங்கமம்’ என்ற கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேந்திரன், தென் சென்னை மக்களவை உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தொடக்கிவைத்தனர்.
தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பெரிய மேளம் போன்ற பல்வேறு கலைநிகழ்சிகள் நடைபெற்றன. சேலத்தில் உள்ள பல்வேறு கலைஞர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, பெரிய மேளம் என்ற நிகழ்ச்சியில் மேளம் முழங்கிகொண்டே கலைஞர்கள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது. கிராமப் பகுதியில் மட்டுமே நடத்தக்கூடிய பொய்க்கால் குதிரை கலைஞர்களின் நடன நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.