சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையத்தில் பரிமளா என்ற பெண் சட்ட விரோதமாக மது விற்றுவந்தார். இவர் 24 மணி நேரமும் மது பானங்களை விற்பனை செய்துவருவதாகவும், இதனால் அப்பகுதியில் அடிக்கடி அடிதடி சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
ஆனால், இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், பிப்.9-ம் தேதி மது பானங்கள் விற்கும் சந்துக் கடையை அப்பகுதி மக்களே அடித்து நொறுக்கினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து, சேலத்தில் சந்துக்கடை நடத்தி வருபவர்கள் பட்டியல் எடுத்து அவர்களை கைது செய்யத் தொடங்கினர். இந்நிலையில், நேற்று(பிப்.28) சந்துக்கடை பரிமளா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, சேலம் மாநகர காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், பரிமளா வீட்டில் இருந்து அதிபோதை தரும் கெமிக்கல் கலந்த விஷ சாராயப் பாட்டில்களும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பரிமளா மீது ஏற்கனவே மது விற்பனை செய்தது தொடர்பாக இரண்டு வழக்குகள் உள்ளன.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ள சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.