சேலம்: மாமாங்கம் பகுதியில அமைந்துள்ள தொன்மையான புராதன காலத்தைச் சேர்ந்த ராமர் பாதத்தை வழிபட செயில் ரீபேக்ட்டரி நிறுவன (Steel Authority of India Limited - SAIL) அதிகாரிகள் கடந்த 15 ஆண்டுகளாக தடை விதித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் பொறுமை இழந்த பக்தர்கள் ஒன்று கூடி அதிரடியாக செயில் அதிகாரிகள் ஏற்படுத்திய தடையை மீறி, பழைய வெள்ளைக்கல் சுரங்கத்தின் உள்ளே சென்று ராமர் பாதத்தை வழிபட்டனர். மேலும் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் 'ராமர் பாதம்' கோயிலை நோக்கி அணி திரள ஆரம்பித்துள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்து வரும் செயில் நிறுவன அதிகாரிகள் மீண்டும் இந்த வழித்தடத்தை மூடவும் மாற்று ஏற்பாடுகளை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ராமர் பாதம் தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், சேலம் மாவட்ட நிர்வாகம் ராமர் பாதம் அமைந்த தொன்மையான பகுதியை ஆய்வு செய்ய வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, ராமர் பாதம் அமைந்துள்ள இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் புதன்கிழமை (டிச.6) நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும், கோயில் அமைந்துள்ள பகுதியில் அருகில் உள்ள பட்டா நிலத்தின் அளவு குறித்தும் அதன் உரிமையாளர் எழுப்பி வரும் கேள்விகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பான விரிவான அறிக்கையை விரைவில் மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய்த்துறையினர் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சேலம் உருக்காலை உயர் அதிகாரிகள் செயில் ரீபேக்ட்டரி நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளை உடனடியாக அழைத்து திடீர் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொன்மையான இடத்தில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும், நில உரிமையாளரின் கேள்விகளுக்கு உரிய பதிலளித்து நில பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை சேலம் உருக்காலை நிர்வாகம் வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.