சேலம்:பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் உள்ளது, கல்லாங்குட்டை ஏரி. இந்த ஏரியானது, வெள்ளாளப்பட்டி கிராமத்திற்கு வெளியே சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் அருகே சிறிய மலைத்தொடரும் உள்ளதால், அங்கிருந்து மழைக் காலங்களில் வரும் மழைநீர் ஏரியில் நிரம்பும் வகையில் இயற்கையாக நீர்வழிப் பாதையும் உள்ளது.
இவ்வாறு காப்புக் காட்டின் அருகில் கல்லாங்குட்டை ஏரி அமைந்துள்ளதால், எப்போதும் அங்கு ஆள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருக்கும். இந்த ஏரிதான் வெள்ளாளப்பட்டி சுற்று வட்டார கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கான நீர் ஆதாரமாகவும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே கடந்த 2019 - 2020ஆம் நிதி ஆண்டில் கல்லாங்குட்டை ஏரியை தமிழ்நாடு அரசு, 20 லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்து உபரி நீர் தடுப்பணையையும் அமைத்தது.
ஆனால், நடப்பு நிதி ஆண்டில் பருவ மழை அதிக அளவில் பெய்த நிலையிலும், கல்லாங்குட்டை ஏரி தண்ணீர் இன்றி தற்போது வறண்டு காட்சியளிக்கிறது. இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 'அமிர்த குளம்' என்ற திட்டம் சேலம் மாவட்டத்தில் அரசால் அமல்படுத்தப்பட்டது.
அமிர்தகுளம் திட்டம் குறித்தும், விதிமுறைகள் குறித்தும் கடந்த 20.08.2023ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் , ''இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தொடங்கப்பட்ட ‘அமுதம் பெருவிழா’வின் ஒரு பகுதியாக புதிய நீர் நிலைகளை உருவாக்கும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட அமிர்த குளங்களை உருவாக்கிடவும், ஏற்கனவே உள்ள குளங்களை புனரமைத்திடவும் நீர்பிடிப்புப்பகுதி மற்றும் நீர் வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைக்கு வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 160 பணிகளும், ஊரகப் பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 104 புதிதாக அமிர்தகுளம் அமைக்கும் பணிகளும், ஏற்கனவே உள்ள 56 குளங்களை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமிர்த குளங்கள் பணியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மண், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் சாலைப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அமிர்தகுளத்திற்காக பொக்லைன் மூலம் தோண்டி எடுக்கப்படும் செம்மண், லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு கல்லாங்குட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் வீட்டுமனை நிலத்தில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகள் தரப்பில் பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புச் செழியனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது , ''அப்படியா, செம்மண் அள்ளப்படுவதும், கொட்டப்படுவதும் எனக்குத் தெரியாது. இதற்கெல்லாம் பெத்தநாயக்கன்பாளையம் பிடிஓதான் பொறுப்பு’’ என்றார்.
தொடர்ந்து பெத்தநாயக்கன்பாளையம் பிடிஓவை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள உதவி பிடிஓ சந்திரசேகரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, ''எனக்கும் தகவல் தெரியாது. எங்களது இன்ஜினியரை அந்தப் பகுதிக்கு அனுப்பி விசாரிக்கிறேன். அரசின் திட்டங்கள் சில சமூக விரோதிகளால் மக்களுக்கு நேரடியாகச் சென்று சேராமல் தடுக்கப்படுகிறது. அதற்கு இது ஒரு உதாரணமாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் அரசியல் தலையீடும் உள்ளது என்று சந்தேகப்படுகிறேன். பெத்தநாயக்கன்பாளையம் திமுக ஒன்றிய பிரமுகர் மூர்த்தி தான் அந்த சந்தேகத்திற்கிடமான நபர்'' எனக் கூறினார்.