தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதை தகராறு கொலை இனக்கலவரமாக மாறிய விபரீதம்

சேலம் : ஓமலூர் அருகே மது போதையினால் ஏற்பட்ட தகராறு, இனக்கலவரமாக மாறும் சூழலால் அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பொறியாளரின் உடல் உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

SALEM
SALEM

By

Published : May 10, 2020, 12:46 AM IST

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சக்கரை செட்டிப்பட்டி புதுக்கடை காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியன். இவரது தம்பி நவீன். இவர்கள் இருவரும் வீட்டின் அருகே இருந்த போது கமலாபுரத்திலிருந்து நாலுகால் பாலம் செல்லும் தார் சாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் குடிபோதையில் வந்த ஆறு பேர் அதிவேகமாகக் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவர்களைப் பார்த்து மெதுவாகச் செல்லுமாறு சகோதரர்கள் கூறியுள்ளனர். இதில், ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் விஷ்ணுபிரியனை கத்தியால் குத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அவரது தம்பி நவீன் தாங்க வந்தபோது அவரை உருட்டுக் கட்டையால் பலமாகத் தாக்கிய போதை ஆசாமிகள், இருசக்கர வாகனங்களை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியோடினர்.

இதில், படுகாயமடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே விஷ்ணுபிரியன் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, அவரது தம்பி நவீனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சகோதரர்களைத் தாக்கிய கும்பலை சேர்ந்த தமிழரசன் சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பியோட முயன்றபோது அப்பகுதி பொதுமக்கள் அவரைப் பிடித்துக் கட்டி வைத்தனர்.

இதை அறிந்து ஓமலூர் காவல் துறையினர் வந்து இளைஞரை மீட்டு காரில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு செல்ல முற்பட்டபோது, பொதுமக்கள் வாகனத்தை விடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையறிந்த டிஎஸ்பி பாஸ்கர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரவேண்டும் உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிக்கர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்வோம் என்ற வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த வாகனத்தை விடுவித்தனர்.

தொடர்ந்து வழக்கு தொடர்பாக ஓமலூர் பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கார்த்திக், சிவகுமார், சண்முகம் , தமிழரசன் உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதை தகராறில் நடைபெற்ற கொலை சம்பவம் தற்போது இரண்டு சமூகங்களுக்கு இடையே இனக்கலவரமாக மாறியுள்ளதால் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விஷ்ணுபிரியனின் உறவினர்கள் கூறும்போது, பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் என்பவரின் தூண்டுதல் பேரில் இச்சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பொறியாளர் விஷ்ணுபிரியன் உடல் சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விஷ்ணுபிரியனின் உடலைப் பெற்றோர் பெற்றுக்கொள்ள வந்தபோது, அவர்களுடன் ஓமலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தலித் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.

தலித் அமைப்பினர் போராட்டம்

படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சேலம் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க : 'வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்த தங்கள் மாநிலத்தவர்களை மீட்க முனைப்புக் காட்டப்படவில்லை'

ABOUT THE AUTHOR

...view details