தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் காவல் ஆய்வாளரை மிரட்டும் பாமக எம்.எல்.ஏ. அருள்! - salem news in tamil

சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் இரா. அருள், பெண் காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

salem-mla-pmk-arul-audio-released
பெண் காவல் ஆய்வாளரை மிரட்டும் பாமக எம்.எல்.ஏ. அருள்

By

Published : Sep 26, 2021, 12:17 PM IST

Updated : Sep 26, 2021, 2:45 PM IST

சேலம்:சேலம் இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளராக பணியில் இருப்பவர் சந்திரகலா. இவருக்கும் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சிலருக்கும் கடந்த சில வாரங்களாக கடும் மோதல் வெடித்துள்ளது.

இரும்பாலை அருகே உள்ள வயதான தம்பதியினருக்குச் சொந்தமான நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிப்பு செய்து கிரையப்பத்திரம் எழுதி வாங்கும் முயற்சியில் பாமக பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட வயதான தம்பதி இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நிலத்தை அபகரிக்க முயன்ற பாமகவினர்

புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சந்திரகலா விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையில் வயதான தம்பதியின் நிலத்தை விற்பனை செய்ய ஒத்துக்கொள்ளாத நிலையில், பாமகவினர் நிலத்தை தங்களிடம் விற்குமாறு , வற்புறுத்தி வந்ததும் அதற்கு சம்மதிக்காத காரணத்தால், மிரட்டல் விடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாமகவினரை காவல் ஆய்வாளர் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

பாமக எம்.எல்.ஏ. அருள் மிரட்டியதாக குற்றஞ்சாட்டு

இந்த நிலையில், இது குறித்து கட்சி நிர்வாகிகள் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்னையில் முகாமிட்டிருந்த அருள் அங்கிருந்து தொலைபேசி மூலம் காவல் ஆய்வாளர் சந்திரகலாவை மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது..

மிரட்டிய எம்எல்ஏ

அந்த ஆடியோவில் எம்.எல்.ஏ. அருள், பெண் காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியும், ”பல்வேறு இடங்களில் 50,000 ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் என கையூட்டு பெற்றுக்கொண்டு பணி செய்யும் உங்கள் மீது சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்” என்றும் பகிரங்கமாக மிரட்டியதாக கூறப்படுகிறது..

இதற்கு பெண் காவல் ஆய்வாளர், தங்களை இதுவரை ஒரு முறைகூட ஒருமையில் பேசவில்லை என்றும் பணி செய்துகொண்டிருக்கும் என்னை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துகொண்டு மிரட்டும் தொனியில் பேசுவது நியாயமில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆடியோ குறித்து விசாரணை

இந்நிலையில், பெண் காவல் ஆய்வாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விவகாரத்தில் ஏதாவது பிரச்னை ஏற்படுமோ என்ற எண்ணத்தில் முன்னதாகவே காவல் ஆய்வாளர் சந்திரகலா மீது , சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அருள் புகார் கொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது . இதுதொடர்பாக உயர் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:‘சிங்கள போர் குற்றவாளிகளை தண்டிக்க இந்திய அரசு துணை நிற்க வேண்டும்’ - ராமதாஸ்

Last Updated : Sep 26, 2021, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details