சேலம்: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் முகாமிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் அவரை, தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக பிரமுகர்கள் சந்தித்தும், பேசியும் வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, சேலம் மாநகராட்சி 31வது கோட்டம் முன்னாள் மாமன்ற உறுப்பினரான சையத் இஸ்மாயில் தலைமையில், கோட்டை பகுதியை சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தினரான ஷாஜகான், அஸ்மத், ஹுசைன், தாரா, ஹமீம் பானு, பாபு, ரஜியா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்று, அவரை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அஸ்தம்பட்டி 2வது பகுதி செயலாளர் முருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது, புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி துண்டு அணிவித்து வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவமூர்த்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சையத்அலி, இணை செயலாளர் அபுபாய் என்கிற மகபூப்அலி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல், சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கோணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர், திமுக-வை சேர்ந்த சங்கீதா செல்வகுமார் மற்றும் வேலாயுதகரடு பாமக கிளை செயலாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில், அக்கட்சிகளில் இருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான கரட்டூர் கே.கே மணி ஏற்பாட்டில், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது, புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவரும், கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளருமான ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:"தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்: SFRBC ரத்தினசபாபதி அறிவிப்பு!