தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் குழு மூலம் மானிய விலையில் கடன் தருவதாக மோசடி.. பெண் உள்பட மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது! - தொடர் மோசடி

Goondas Act: தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணை செயலாளர் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விசிக காயத்ரி உட்பட மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது
விசிக காயத்ரி உட்பட மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 6:17 PM IST

சேலம்: சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட முன்னாள் துணைச் செயலாளராக இருந்தார். இந்நிலையில் அவர், தனது ஓட்டுநர்களான அசோக்குமார், ராஜசேகர் ஆகியோருடன் இணைந்து தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ந் காயத்ரி உட்பட 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலத்துறை பிரிவில் அரசு துறை உயர் அதிகாரியாக காயத்ரி வேலை செய்வதாகவும், நலிவுற்ற மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அரசு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மானியக் கடன் பெற்றுத் தருவதாக கூறி, அவரது கார் ஓட்டுநர்கள் அசோக்குமார், ராஜசேகர் உட்பட பலருடன் சேர்ந்து, 26 பெண்களிடம் ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கேட்பவர்களையும், அவர்களுடைய குழந்தைகளையும் கடத்தி ஆட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், காயத்ரியிடம் ஓட்டுநராக பணிபுரியும் அசோக்குமார், ராஜசேகர் ஆகியோர், காயத்ரியின் செயலுக்கு உடந்தையாக இருந்து கொண்டு, அவரிடம் பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, இந்த புகாரின் பேரில் காயத்ரி, அசோக்குமார், ராஜசேகர் ஆகியோர் மீது சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அதில், கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை காயத்ரி பல்வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்ததும், பணத்தை திருப்பி கேட்டவர்களை தனது ஓட்டுநர்களான அசோக்குமார், ராஜசேகர் ஆகியோர் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததும் உறுதியானதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அந்த வகையில், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இவர் மீது ஐந்து வழக்குகளும், மோசடிக்கு உறுதுணையாக இருந்த அவரது ஓட்டுநர்களான அசோக்குமார், ராஜசேகர் ஆகியோர் மீது தலா மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற தொடர் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட காயத்ரி, ஏற்கனவே 2016ஆம் ஆண்டு குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், காயத்ரி அவரது ஓட்டுநர்களான அசோக்குமார், ராஜசேகர் ஆகியோருடன் இணைந்து, மீண்டும் தொடர் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட காரணத்திற்காக, தற்போது சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி உத்தரவின் பேரில், மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் தடுப்பு காவலில் வைக்க ஆணை பிறப்பித்தார். இந்த தடுப்பு காவல் ஆணையின்படி அசோக்குமார், ராஜசேகர் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும், காயத்ரி கோவை பெண்கள் தனி சிறையிலும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க:வேலியே பயிரை மேய்ந்த கதை! ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! போலீசார் கைது!

ABOUT THE AUTHOR

...view details