மாவட்டத்தில் காவிரி ஆறு பரந்துவிரிந்து ஓடினாலும் ஆற்றின் கரையோரப் பகுதிகளை தவிர மாவட்டத்தின் பிற பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
மாவட்டத்தின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தண்ணீர் என்பது முழுமையாக இன்னும் தீர்க்கப்படாத பிரச்னையாகவே இருக்கிறது.
அதனால் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்க சேலம் மாவட்டத்தில் உள்ள 380 ஏரிகளையும் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகளும், சூழலியல் ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வழக்கத்தை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், நீர் வழித்தடங்கள் சீமை கருவேலம், ஆகாயத்தாமரை ஆகியவற்றின் ஆக்கிரமிப்பால் தண்ணீரின்றி வறண்டு போய்க் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பரிதாப நிலையில் பவளத்தானூர் ஏரி சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட பவளத்தானூர் ஏரி தற்போது ஆகாயத்தாமரைகள் அதிகம் வளர்ந்து மண்டிக் கிடப்பதால் குட்டை போல் காட்சியளிக்கிறது. தாரமங்கலம் அடுத்துள்ள மானத்தாலள் ஏரியிலிருந்து நிரம்பி வெளியேறும் உபரிநீர், அமரகுந்தி, தாரமங்கலம் பெரிய ஏரி வழியாக குறுக்குப்பட்டி நீர்த் தடத்தில் புகுந்து, தண்ணீர் பவளத்தனூர் ஏரிக்கு வந்து சேரும்.
முழுமையாக மழை நீரை மட்டுமே நம்பியுள்ள பவளத்தானூர் ஏரி அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன உயிர் நாடியாகவும் இருந்து வந்தது.
இந்த நிலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாறிப்போய் தனியார் ஆக்கிரப்பால் ஏரி சுருங்கிப் போனது. அதே நேரத்தில் தாரமங்கலத்தைச் சுற்றி உள்ள சாயக்கழிவுகள், நகரக் கழிவுகள் ஆகியவை இந்த ஏரிக்கு திருப்பி விடப்படுவதால் இந்த ஏரி கழிவுநீர் குட்டையாக மாறிப் போயுள்ளது.
தற்போது இதனை மாற்றி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று பவளத்தானூர் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக முன்னாள் கல்லூரி பேராசிரியர் ராமசாமி கூறுகையில், நான் சிறு வயதாக இருக்கும் பொழுது பவளத்தனூர் ஏரி கடல் போல் காட்சியளிக்கும். ஆனால் தற்போது தண்ணீர் இருப்பதே கண்ணுக்குத் தெரியவில்லை. எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சில வாரங்களில் வறண்டுபோய் கிடப்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது.
மேலும் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் வளர்ந்து இருப்பதால் பெய்யும் மழைநீரை அவை அப்படியே உறிஞ்சி எடுத்து மேலும் வளர்ந்து விடுகின்றன. இதனால் மழைநீர் ஏரியில் இறங்க வழியில்லை. அத்திக்காட்டானூர், போத்தனூர் வரையில் இந்த ஏரியின் நீர் ஆதாரமாக இருந்தது.
தற்போது தண்ணீர் சேமிக்க இயலாத நிலையில் ஏரி இருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் ஆயிரத்து இருநூறு அடிக்கும் கீழே சென்றுவிட்டது. அப்படி ஆயிரத்து இருநூறு அடிக்கும் கீழே இருந்து நீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுத்தாலும் அந்த நீர் உப்புத் தண்ணீராக இருக்கிறது.
அதேசமயம் அந்த தண்ணீர் விஷமாக மாறி விட்டது. இதனால் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை கடுமையாக ஏற்பட்டுள்ளது .
மேட்டூர் அணையிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை மட்டுமே எங்கள் கிராம மக்கள் நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மீண்டும் பழையபடி பவளத்தானூர் ஏரியில் மழை நீர் சேகரிக்கப்பட்டு சுற்றுவட்டார 18 கிராமங்களுக்கும் நீராதாரத்தை மேம்படுத்தவும் ஆகாயத் தாமரைகளை அகற்றி, தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதேபோல் பவளத்தானூர் பகுதியில் வசிக்கும் மணிமாறன் பேசுகையில், “தற்போது எங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் தப்பித்து வருகிறோம். பருவமழை அதிகம் பெய்யும் ஏரியில் நீர் சேமிக்க முடியாததால் சில மாதங்களிலேயே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடும். ஒவ்வொரு ஆண்டும் இதே தான் நடந்து வருகிறது. எனவே ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்றி விரைந்து ஏரியை சீரமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஊர் மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்" எனக் கூறினார்.
பவளத்தானூர் ஏரி அவல நிலை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீஸ்வரனிடம் கேட்டபோது, “ஏரியை தூர்வாரி பாதுகாக்க அளவீடு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஏரியின் நீர்வள ஆதாரத்தை பெருக்கினால் துட்டம்பட்டி, குறுக்குப் பட்டி, தெசவிலக்கு , கோண கப்பாடி, கருக்கல்வாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பயனடைவர். பவளத்தானூர், அத்திக்காட்டானூர் விவசாயிகளும் பொது மக்களும் பயனடைவர்.
இது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஏரியில் நில அளவீடு நடந்து வருகிறது. மேலும் மேட்டூர் அணையின் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அந்த ஏரியில் பவளத்தானூர் ஏரியும் ஒன்று. எனவே அது தொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து ஆகாயத் தாமரைகளை விரைந்து அகற்றி பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூர்வாராத பொதுப்பணித் துறை: அழுகிய நாற்றுடன் விவசாயிகள் போராட்டம்