தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் சேலம் மாவட்ட நிர்வாகம்..! - today latest news

salem district sends relief goods to chennai: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகத்தால் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

salem district sends relief goods to chennai
சென்னை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் சேலம் மாவட்ட நிர்வாகம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 5:37 PM IST

சேலம்: சென்னைக்குப் புயல் நிவாரணப் பொருட்களை சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மிக்ஜம் புயல் சீரமைப்புப் பணிகளைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.

இதன் விளைவாகப் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெது மெதுவாகத் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் சென்னைக்குப் புயல் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட நிர்வாகத்தால் ஆவின் பால் பவுடர், வாட்டர் பாட்டில், பிரட், பிஸ்கட், ஹெல்த் டிரிங்க் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட உணவுப் பொருட்கள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட நிவாரணத் தொகுப்பை சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் அட்டைப் பெட்டிகளில் முறையாக அடுக்கி சென்னைக்கு அனுப்பும் பணியினை நேற்று (டிச 05) இரவு முழுவதும் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.

இப்பணி இன்று (டிச 06) அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக லாரி மூலம் சென்னைக்கு நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் அனுப்பி வைத்தார். அதனை அடுத்து, இரண்டாம் கட்டமாக இன்று (டிச 06) காலை 11 மணிக்கு 3,000 எண்ணிக்கையிலான நிவாரணத் தொகுப்பு ஏற்றப்பட்ட லாரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், தேவைக்கு ஏற்ப சென்னைக்கு நிவாரணப் பொருட்களை சேலம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைத்திடத் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், கூடுதல் மாவட்ட ஆட்சியர் மரு.அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தனி மாவட்ட வருவாய் அலுவலர் கீதா பிரியா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன், உதவி ஆணையர் (கலால்) மாறன் உள்ளிட்ட அலுவலர்கள் இப்பணியினை இரவு, பகலாக மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தொடரும் மீட்புப்பணி; சென்னையில் நாளையும் (டிச.7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ABOUT THE AUTHOR

...view details