சேலம்:டெங்கு தடுப்பு நடவடிக்கை பணியாக நெத்திமேடு அருகில் இட்டேரி தெருவில் உள்ள பழைய நெகிழி சேகரிப்புக் கிடங்கில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் நேற்று (அக்.10) மாலை ஆய்வு மேற்கொண்டார். பின், செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறுகையில், ‘பருவ மழை பெய்து வருவதையொட்டி, மாவட்ட நிர்வாகத்தால் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தி ஆகிறது என்பதால், வீட்டின் உள்ளே மூடப்படாமல் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கும் தண்ணீர் பாத்திரங்கள், தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம் தேங்கும் தண்ணீர் மற்றும் சுற்றுப்புறத்தில் கிடக்கும் பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், நெகிழி கப்புகள் ஆகியவற்றில் தேங்கும் மழை நீரில் இருந்தும் டெங்கு லார்வாக்கள் அதிகளவில் உற்பத்தியாக வாய்ப்பாக அமைகிறது.
டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சிப் பகுதியில் 500 பணியாளர்களும், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 650 பணியாளர்களும் என மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக 1,150 கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று லார்வா புழுக்களை ஒழித்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.