தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் மூலம் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.
வேட்பாளர்களுக்கான விலைப்பட்டியலை வெளியிட்டார் சேலம் ஆட்சியர்! - Salem District collector
சேலம்: சேலத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர்கள் செலவு செய்யும் பொருள்களுக்கான விலைப்பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம் நடத்திய சேலம் ஆட்சியர்
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாள்தோறும் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்களைக் கணக்கிடுவற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பொருள்களுக்கும், இதர அத்தியாவசியப் பொருள்களுக்கும் சேலம் மாவட்டத்தில் நிலவும் விலையின் அடிப்படையில் நிலையான விலைப்புள்ளிப் பட்டியல் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று (மார்ச் 5) நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் கருத்துகளும் கேட்கப்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு நிலையான விலைப்புள்ளி பட்டியல், இறுதிசெய்யப்படவுள்ளது.
தேர்தல் செலவு கணக்கு, சேலம் மாவட்டத்திற்கு உள்பட்ட 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் நாள்தோறும் மேற்கொள்ளும் செலவினங்கள், நிர்ணயம் செய்யப்படவுள்ள நிலையான விலைப்புள்ளி பட்டியல் கொண்டு கணக்கீடு செய்து, அவர்களது தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
அவை தேர்தலின்போது நியமனம்செய்யப்படும் தேர்தல் செலவின மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கப்படும் என ஆட்சியர் ராமன் தெரிவித்தார். இதற்கான விலைப்பட்டியல் நேற்று (மார்ச் 5) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.