கிறிஸ்தவ மக்களின் முக்கிய விழாவான ஈஸ்டர் பண்டிகை நாளன்று இலங்கை தேவாலயத்தில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கிறிஸ்துவ மக்கள் ஒன்று திரண்டு இலங்கை குண்டுவெடிப்பில் பலியான மக்களுக்காக மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பாக சேலம் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பின் தலைவர் பாஸ்டர் விமல் மோசஸ் கூறுகையில், இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் கண்டித்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக இறந்த அப்பாவி கிறிஸ்தவர்களுக்காக நாங்கள் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்துகிறோம்.
இதுபோன்ற கொடூர சம்பவங்கள் எங்கும் நடைபெறாத வண்ணம் அரசு நிர்வாகங்கள் விழிப்போடு இருக்க வேண்டும். குண்டுவெடிப்பில் பலியான அப்பாவி மக்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு குண்டுவெடிப்பில் இறந்த மக்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.