சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பறவைக்காடு, பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.
இவர்களில் 17 வயதான சிறுமி ஒருவரும் 15 வயதான சிறுமி ஒருவரும் சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியில் உள்ள விவசாயி ரவீந்திரனின் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர்.
கரோனா தொற்று அச்சுறுத்தலால் இரு சிறுமிகளும் பறவைக்காட்டில் இருக்கும் தங்களது வீட்டிற்கு ஆறு மாதத்துக்கு முன்பு வந்தனர். அதிலிருந்து அவர்கள் வீட்டில் உள்ள யாரிடமும் சரியாகப் பேசாததால் சிறுமிகளுக்குப் பேய் பிடித்துவிட்டதாக பெற்றோர் எண்ணி மந்திரிக்க நாமக்கல் மாவட்ட பூசாரி சேகர் என்பவரிடம் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்து சிறுமிகள் பெற்றோரிடம் தெரியப்படுத்தவே பூசாரி சேகரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.
அதேபோல் கடந்த ஒரு வருடமாக ரவீந்தரனும் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக சிறுமிகள் கூறினர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர், உறவினர்கள் நவம்பர் 20ஆம் தேதி சேலம் வீராணம் காவல் நிலையத்தில் ரவீந்திரன் மீது புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ரவீந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். பின் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் துறையினர் நவம்பர் 21ஆம் தேதி கைதுசெய்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரவீந்திரன் இதன் பின்னர் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் நேற்று (நவம்பர் 22) காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு காவல் துறையினர் வாக்கு மூலம் பெற்றனர். அப்போது ரவீந்திரன் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததோடு இதை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர்கள் கூறினர்.
இதனைப் பதிவு செய்துகொண்ட காவல் துறையினர் சிறையில் அடைக்கும் முன் ரவீந்திரனுக்கு கரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதிக்க அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்துகொண்ட ரவீந்திரனுக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து சிகிச்சைக்காக ரவீந்திரன் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காவல் துறையினரின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இரண்டு சிறுமிகளிடம் வாக்குமூலம் பெற்ற அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் சிறுமிகளை அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.