சேலம்:தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்தது.
இலவச பயணச்சீட்டு கொடுத்து முறைகேடு:
இந்த நிலையில் சேலம் ரயில் நிலையத்திலிருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் செல்லும் அரசுப்பேருந்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 26 பேர் ஏறியுள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை கொடுத்து கட்டணம் வசூலித்துள்ளார், பேருந்து நடத்துநர் நவீன் குமார்.
இந்த நிலையில் பேருந்து ஐந்து ரோடு அருகே வந்தபொழுது போக்குவரத்துத்துறை அலுவலர்கள் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது வடமாநில ஆண்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக சகப்பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி, மாற்று பேருந்துக்கு அனுப்பிவைத்த அலுவலர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வடமாநிலத்தவர்கள், அரசு பேருந்தின் நடத்துநர் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.