சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் புத்தகத் திருவிழா வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ’சேலத்தில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் பல்வேறு ஆளுமைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஜனவரியில் உலக புத்தகத் திருவிழா நடத்திட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த புத்தகத்திருவிழாவை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்திட ரூ.5.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகத்திருவிழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள், ரூ.10 முதல் ரூ.1000 வரையிலான புத்தகங்கள், கலை இலக்கியம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், முற்போக்கு, அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கான நூல்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுக்கான வழிகாட்டி கைடுகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வங்கி வேலைவாய்ப்பு..!விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..