நாடு முழுவதும் கரோனா தொற்றுக்காக ரெம்டெசிவிர் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மருந்தின் தேவை அதிகரித்ததால், அவை கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. எனவே, இதனை கண்காணிக்க அரசு ஆவன செய்துவருகிறது.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை!
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்றிரவு முதலே இம்மருந்தினை வாங்க ஆயிரக்கணக்கில் மக்கள் தகுந்த இடைவெளியின்றி குவிந்தனர். மருந்து வாங்க மருத்துவர் பரிந்துரை மற்றும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியதால், அதற்கான டோக்கன்கள் சனிக்கிழமை அன்றே வழங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை ரெம்டெசிவிர் மருந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்ற வாரம் இம்மருந்து அரசு மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பொதுமக்கள் தகுந்த இடைவெளியின்றி கூடியிருப்பதால், கரோனா தொற்று பரவும் அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் மக்களை ஒழுங்குப்படுத்த 50 பேர் கொண்ட காவல் துறையினர் குழு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.