சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்ப்புதூர் கிராமம் ராமமூர்த்தி நகரில் வசித்துவந்த மாவோயிஸ்ட் மணிவாசகம், 2019இல் கேரள நக்சல் தடுப்புப் பிரிவு (தண்டர்போல்ட்) காவல் துறையினரால் கேரள மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து 2019 நவம்பர் 15ஆம் தேதி மணிவாசகத்தின் உடல் அவரது சொந்த ஊரில் பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் தகனம்செய்யப்பட்டது.
இறுதி மரியாதை நிகழ்ச்சியில், அரசுக்கு எதிராக முழக்கமிட்ட சிலரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதில் தலைமறைவாக இருந்த 10 பேரை காவல் துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில், வாழப்பாடி மின்னாம்பள்ளியைச் சேர்ந்த செல்வராஜ் (55), ஓமலூரைச் சேர்ந்த பாலன் (41), சேலம் செல்வம் நகரைச் சேர்ந்த சீனிவாசன் (66) ஆகியோரை தீவட்டிப்பட்டி காவல் துறையினர் சில நாள்களுக்கு முன்பு கைதுசெய்தனர்.