தமிழ்நாட்டில் சேலம் ரயில்வே ஜங்ஷன் தென்னக ரயில்வே கோட்டங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் தென் தமிழ்நாடு, கர்நாடகம் , ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் பிரதான ரயில்வே ஜங்ஷனாக, சேலம் ரயில்வே ஜங்ஷன் விளங்கி வருகிறது.
ஆனால், தற்போது கரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாகவும், பொதுப்போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் பயணிகள் ரயில் போக்குவரத்தின்றி, சேலம் ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. 24 மணி நேரமும் பயணிகளின் நடமாட்டத்தால் பரபரப்புடன் இருக்கும் சேலம் ரயில்வே ஜங்ஷன், தற்சமயம் பயணிகளின் ஆரவாரமின்றி அமைதி காத்து கிடப்பது வரலாறு காணாத ஒன்று.
கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தற்போது வரையில், கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பொது ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கான ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு, அவ்வப்பொழுது சரக்கு ரயில் போக்குவரத்து மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்தப் பொதுபோக்குவரத்து முடக்கத்தால் ரயில் நிலையங்களில் தேநீர் கடைகள், உணவுக் கடைகள் வைத்திருந்தோர் மிகுந்த பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். அதில் பலர் வேறு வழியின்றி, தங்களது கடைகளைக் காலி செய்துவிட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதுகுறித்து சேலம் ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உணவுக்கடை நடத்தி வரும் ஆனந்த் என்பவர் நம்மிடம் கூறுகையில்,"கடந்த பல ஆண்டுகளாக ஜங்ஷன் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறேன். இந்த கரோனா தடை காலத்தில் முழுமையாக கடை மூடப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் வருமானமின்றி தவித்து வருகிறோம். அதனால் மத்திய, மாநில அரசுகள் இந்த பொதுமுடக்கத்தை நீக்க வேண்டும். முழுமையாகவே பொது முடக்கத்தை வாபஸ் பெற்று இயல்பான நாட்களைப் போல உணவுக் கடைகள் நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் ரயில் போக்குவரத்து இல்லாததால் உணவுக்கடை மூலம் வந்த வருமானம் சுத்தமாக நின்று போய்விட்டது. பலபேர் ஜங்ஷன் பகுதியில் உணவுக் கடை வைத்திருந்தவர்கள் காலி செய்துவிட்டு வேறு வழியில்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
அதேபோல் ஜங்ஷன் பகுதியில் தேனீர் கடை நடத்திவரும் சங்கர் என்பவர் கூறுகையில், "ஆறு மாதமாக கடைகளைத் திறக்க முடியாததால் வருமானம் இல்லாமல், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். இந்தக் கடைகளை மட்டுமே நம்பி குடும்பத்தை நடத்தி வந்த நாங்கள், தற்போது வருமானம் இல்லாததால் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறோம். ஆகையால் மத்திய, மாநில அரசுகள் இந்த பொதுமுடக்கத்தை வாபஸ் பெற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
பொதுமுடக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த ரயில்வே பிளாட்ஃபார்ம் கடை உரிமையாளர்கள் சேலத்திலிருந்து அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்ளும் சமூக ஆர்வலர் தங்கதுரை என்பவர் கூறுகையில்,"அடிக்கடி சேலத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மதுரை, தூத்துக்குடி போன்ற பல நகரங்களுக்கு ரயில் பயணம் செய்வேன். ஆனால், தற்போது ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டதால் ஆறு மாதமாக எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை. கரோனா நோய்க்கு உரிய மருந்தை கண்டுபிடித்து நோய்த்தொற்று பரவலுக்கு மத்திய மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: கலக்கத்தில் லாரி உரிமையாளர்கள்