சேலம்:ஏற்காடு மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் அதிகளவில் காய்ச்சப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் டிஎஸ்பி தையல் நாயகி முன்னிலையில், ஏற்காடு மலைப்பகுதியில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
சாராய ஊறல்கள் அழிப்பு
தேடுதல் வேட்டையில் ஏற்காடு கொம்மக்காடு கிராமத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியின் ஒரு ஓடையில் கள்ளச் சாராய ஊறல் இருப்பது காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து ஊறல் போடப்பட்டு இருந்த சுமார் 1,500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. கள்ளச் சாராயம் தயாரித்த குற்றவாளிகளைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் 1,500 லிட்டர் சாராய ஊறலைக் கண்டுபிடித்து அழித்த காவல் துறையினர் டிஎஸ்பி தையல் நாயகி கூறுகையில், 'ஏற்காட்டில் சாராயம் மட்டுமல்லாது லாட்டரிச் சீட்டுகள், சட்ட விரோதமான மது பாட்டில்கள் விற்பனை போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் நிச்சயம் தண்டிக்கபடுவார்கள்' என்று கூறினார்.
மேலும், அவர் 'இதுபோன்ற சோதனைகள் ஏற்காடு மலைப்பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தால், சாராய விற்பனை முழுவதும் தடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இருப்பினும், அப்பகுதியில் நள்ளிரவில் காவலர்கள் மலைப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நெம்மேலியில் ஆய்வு செய்த முதலமைச்சர்